முருகதாஸை கைது செய்யும் நடவடிக்கை – சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.இப்படத்தின் அதிமுகவினரை மறைமுகமாக சாடும் காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர்.

மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் இயற்பெயரை சர்கார் படத்தின் வில்லிக்கு வைத்தது, இலவச பொருட்கள் கொடுப்பதை எதிர்ப்பது போன்ற காட்சிகளை வைத்து அதிமுகவிற்கு எதிராக விஜய் செயல்படுவதாக கூறி தொண்டர்கள் கொந்தளித்தனர்.

நேற்றிரவு ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக போலீஸ் சென்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்புக்காகவே சென்றதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, போலீஸார் தனது வீட்டுக் கதவை பலமுறை தட்டியதாகவும், தான் அங்கு இல்லையென்றதும்

அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை, அதிமுகவினர் எதிர்ப்பு, போலீஸ் வந்தது போன்ற காரணங்களால் தன்னை போலீஸார் கைது செய்யக்கூடும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தற்போது இப்பட விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ம் தேதி வரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முருகதாஸை 27ஆம் தேதி வரை கைது செய்ய முடியாது.